search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கம்யூ எம்எல்ஏ"

    கேரளாவில் பாலியல் புகாரில் சிக்கிய கம்யூ. எம்எல்ஏ சசிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். #Congress
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் சொர்னூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் சசி.

    கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த இவர் மீது அந்த கட்சியின் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர் கட்சி மேலிடத்தில் பாலியல் புகார் கொடுத்துள்ளார்.

    இந்த புகார் பற்றி அவர், மேலிட தலைவரான சீதாராம் யெச்சூரிக்கு விரிவாக கடிதமும் எழுதி உள்ளார். இதை தொடர்ந்து கேரள மாநில கம்யூனிஸ்டு கட்சி மேலிடத்தை இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி சீதாராம் யெச்சூரி உத்தரவிட்டுள்ளார். எம்.எல்.ஏ. மீதான புகார் பற்றி அந்த கட்சியின் மாநில கமிட்டியும் விசாரணை நடத்தி வருகிறது.

    அதேசமயம் தன் மீதான புகாரை சசி எம்.எல்.ஏ. மறுத்துள்ளார். ஒரு கம்யூனிஸ்டுகாரன் என்ற முறையில் கட்சி நடத்தும் விசாரணையை சந்திக்க தான் தயாராக இருப்பதாகவும் அவர் கூறி உள்ளார்.

    இந்த புகாரை வைத்து தனது அரசியல் வாழ்வை முடக்கி வீட்டில் உட்கார வைத்து விடலாம் என்று யாராவது நினைத்தால் அது நடக்காது என்றும் சசி எம்.எல்.ஏ. கூறினார்.

    சசி எம்.எல்.ஏ. மீது பாலியல் புகார் கூறிய பெண் நிர்வாகி, அதுபற்றி போலீசில் புகார் எதுவும் செய்யவில்லை. அதேசமயம் தேசிய மகளிர் கமி‌ஷன் இதில் தலையிட்டு சசி எம்.எல்.ஏ. மீதான புகார் பற்றி விசாரணை நடத்தும்படி கேரள மாநில டி.ஜி.பி.யை கேட்டுக் கொண்டுள்ளது.

    இதனால் அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி சட்ட நிபுணர்களுடன் டி.ஜி.பி. ஆலோசித்து வருகிறார். அதே சமயம் சசி எம்.எல்.ஏ.வுக்கு எதிராக கேரளாவில் எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

    அவரை கைது செய்ய வேண்டுமென்று தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் நேற்று டி.ஜி.பி. அலுவலகத்திற்கு பேரணியாக சென்று முற்றுகையிட முயன்றனர். தடுப்பு வேலிகளை தாண்டி அவர்கள் முன்னேற முயன்றதால் போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்து அவர்களை விரட்டினார்கள்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    அதேபோல கேரள மாணவர் சங்கம் சார்பில் திருவனந்தபுரத்தில் உள்ள மாநில மகளிர் கமி‌ஷன் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சசி எம்.எல்.ஏ. மீதான பாலியல் புகார் பற்றி விசாரணை நடத்த தேசிய மகளிர் கமி‌ஷன் உத்தரவிட்டுள்ளது. ஆனால் மாநில மகளிர் கமி‌ஷன் இந்த புகாரில் மவுனம் சாதிப்பது ஏன்? என்று அவர்கள் கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

    மேலும் பிளாஸ்டிக் பாட்டில்களில் கரைத்து கொண்டு வந்திருந்த மாட்டு சானத்தையும் அவர்கள், அங்கு கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களையும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரட்டி அடித்தனர்.

    இதற்கிடையில் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரான அச்சுதானந்தன் இந்த பிரச்சினை பற்றி சீதாராம் யெச்சூரிக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், சசி எம்.எல்.ஏ. மீதான பாலியல் புகார் காரணமாக மக்கள் மத்தியில் கம்யூனிஸ்டு கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். #Congress
    ×